Killலிசூனியம் குறித்த பதிவு.
-கற்சுறா
ஜோர்ஜ். இ.குருசேவ் அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலம் தொட்டு கடைசிவரை மிக இறுக்கமான விமர்சனங்களை முன்வைத்து வருபவர். 90களில் அவரால் கனடாவில் இருந்து வெளியிடப்பட்ட தாயகம் பத்திரிகை புலம் பெயர் சூழலில் மிக முக்கிய பங்காற்றியது. சமூகத்தில் நிகழும் ஆழுகுண்ணித்தனமான அனைத்து விடையங்கள் மீதும் தனது கோபம் மூலமும் நையாண்டித்தனம் மூலமும் விமர்சித்துத் தள்ளியவர். அவருடைய நாடகம் தான் முடைடலி சூனியம். ஜோர்ஜ் இ. குருஷேவினால் எழுதி, இயக்கியிருக்கும் முடைடலி சூனியம் எனும் இந்தப்பிரதி மயிர்க்கூச்செறியும் சாதியப் பின்புலத்தைக் கொண்ட நமது சமூகத்தில் தமிழ்த் தேசியம் வளர்க்கப்பட்டவிதங்களையும் பின்னர் அதீதமாக வெறியூட்டப்பட்டதாகத் தேசியம் மாறிய வடிவங்களையும் கடந்தகால அனுபவங்களுக்குள்ளால் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. தியாகிக்கும் துரோகிக்கும் இடையில் ஈழ அரசியல் படும் அவஸ்தையை இந்தப்பிரதி கடுமையாக விமர்சனத்திற்குள்ளாக்கிறது. வழமையான ரொறன்ரோ தமிழ்ச்சூழலின் நாடகத்திலிருந்து சற்று வேறுபாடுடையதாக இருக்கும்; முடைடலி சூனியம் என்ற நாடகத்தில், முழுப்பிரதியின் ஒருபகுதி மட்டுமே தற்பொழுது மேடையேறியது. நேர அவகாசம் கருதி மிக முக்கியமான பக்கங்கள் பல நீக்கப்பட்டன என்பதைச் சொல்லியாகவேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஜோர்ஜ் அவர்கள் அவற்றையும் வெளிக்கொண்டுவரவேண்டும்.
பொதுவாக மிக அமைதியான கூச்சசுபாவமுடைய பேசுவதற்கு தயங்கும் குருசேவ் தனது எழுத்துக்களில் யாருக்கும் கருணை காட்டியதில்லை. தனது உண்மையை தனது அறத்தை தனது கோபத்தை எப்போதும் எழுத்துக்களில் காட்டிநிற்பவர். நான் ஏன் இவற்றைச் சொல்லி வருகிறேன் என்றால் இந்த நாடகப்பிரதி பூராவும் இவை யாவும் பரவிக்கிடக்கிறது. தொடர்ந்து குருசேவின் எழுத்துக்களை வாசிப்பவர்கள் இதனைப் புரிந்து கொள்வார்கள்.
இந்த நாடகம் யாழ்ப்பாணத்தை மையப்படுத்துகிறது. யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது என்ற வளை கோபுரம் திரையில் வரவேற்க ஒளி யாழ்ப்பாணத்து நிலச்சுவாந்தரான பாணரில் போய்க் குவிகிறது. தனது நிலங்களை சிங்கனிடம் பறிகொடுத்துவிட்டு சாய்மனைக் கதிரையில் தூங்கிக் கொண்டிருக்கும் பாணருக்கு கால்பிடித்துவிட்டு விசிறிக் கொண்டிருக்கும் அவரது அடிதடி, அவருக்கு எடுபிடி வேலை செய்யும் ஒடுக்கப்பட் சமூகத்தவரான எடுபிடி, பாணருடைய கணக்கு வழக்குகளைப்பார்த்துக் கொள்ளும் கணக்குப்பிள்ளை, அவ்வப்போது வந்து பாணருக்குப் புத்தி சொல்லி அவரை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் நல்லூர் அறுமுகம் வாத்தியார் போன்றவர்கள் மேடையில் இருக்க முதல் கட்ட நாடகம் தொடங்குகிறது. மிக இறுக்கமான உரையாடல் எடுபிடிக்கும் நல்லூர் ஆறுமுகம் வாத்தியாருக்கும் தொடர நாடகம் சூடு பிடிக்கிறது. ஈழத்தின் சாதியமைப்பின் விளையாட்டுக்களை மிகமிக நையாண்டித்தனமாக மிகக் கோபமாக இருவரது உரையாடலும் போட்டுடைக்கிறது.
வாத்தியார்: பொடியைப்பார்த்தால் படிச்சவன் மாதிரித்தான் கிடக்குது. சாதி குலம் கோத்திரம் சரியெண்டால் பேசலாம்தானே.
எடுபிடி: வாத்தியார் அதுக்கு நீங்கள் இவ்வளவு நேரமும் மினக்கெட்டிருக்கத் தேவையில்லை. நேரையே என்ன சாதி எண்டு கேட்டிருந்தால் சொல்லியிருப்பன்.
வாத்தியார்: இந்தியாக்காரன் மாதிரி நாங்கள் என்ன பேருக்குப் பின்னால சாதியே போட்டுவைச்சிருக்கிறம். உப்பிடி எவடம் அந்த ஒழுங்கையோ, இந்தக் கோயிலடியோ அவரைத் தெரியுமோ. இவருக்கு என்ன முறை எண்டு சுத்தி வளைச்சுத்தானே சாதியைப் பிடீக்கேலும்.
எடுபிடி: சட்டம்பியார் உங்கடநேரத்தை ஏன் மினக்கடுத்துவான். நானும் இந்த ஊர்தான் கந்தசாமியின்ர பேரன்.
வாத்தியார்: அட… கந்தன்…ர… பேரன்.
எடுபிடி: பிறப்புப் பேர் பதியப் போகேக்கை கூட கந்தசாமி வைரவநாதனுகளை எல்லாம் கந்தன் வைரவன் பூதன் எண்டு சாதியை அறிய வசதியாப் பதிஞ்ச பரம்பரை… முழுப்பேர் சொல்லிக் கூப்பிட மனங்கேளாது.
வாத்தியார்: டேய் உன்னத்தானே உன்ர கொப்பன் எங்களிட்டப் படிப்பிக்க அனுப்பாமல் வெள்ளைச்சட்டை போட்ட பாதிரியிட்ட படிக்க அனுப்பினவன்.
எடுபிடி: எங்கட சனத்திற்கு நீங்கள் எங்க படிப்பிச்சனீங்கள்? அடிமை குடிமையாய் வைச்சு வேலையெல்லோ வாங்கிக் கொண்டிருந்தனீங்கள்.
வாத்தியார்: ஏன் நாங்கள் திண்ணைப்பள்ளிக்கூடத்தில உங்கட ஆக்களுக்கும் படிப்பிச்சனாங்கள் தானே.
எடுபிடி: ஓமோம் மேலில சட்டை போடவிடாமல் நிக்கவைச்சுப் படிப்பிச்சனீங்கள்.
வாத்தியார்: நாங்கள் ஓரே ஆட்கள் உங்கட ஆக்கள் என்னெண்டு அந்நிய சாதிட்டப் போய் படிப்பியள்?
எடுபிடி: உங்களிட்ட வந்திருந்தாலும் என்ன கணிதமும் விஞ்ஞானமுமே படிப்பிச்சிருப்பியள். சும்மா தேவாரத்தையும் இலக்கணச் சுருக்கத்தையும் படிப்பிச்சுப் போட்டு எளிய சாதியரிடத்திலும் சைவமும் தமிழும் செழித்தோங்குது எண்டு காது குத்தியிருப்பியள்.
வாத்தியார்: உங்களுக்கு எங்கயடா காது குத்துறது? உங்களுக்கும் காது குத்தலாம் எண்டு ஆகமத்தில சொல்லயில்லையே
இப்படி மிகக் காரமான சாதிபற்றிய உரையாடல் வாத்தியாருக்கும் எடுபிடிக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்க வாத்தியாருக்கு பக்கபலமாய் இருந்து ஆமாம் போட்டுக் கொண்டிருக்கிறார் கணக்கப்பிள்ளை. யாழ் சாதி வெறிபிடித்த சமூகம் தனக்கான தேசியத்தை எப்படிக் கட்டிவளர்த்தது என்பதையும். அதை எப்படி பொதுவானதாக்கி தனக்கு இயைபாக நாடகமாடியது என்பதையும் நாடகத்தின் தொடர்ந்த உரையாடல் பதிவு செய்கிறது. ஆகம விளக்கத்துடன் விளக்கம் சொல்லும் வாத்தியாரை மறுத்து அடிதடி வைக்கும் அத்தனை விவாதங்களையும் மறுதலிக்க முடியாமல் போன வாத்தியார் ஒருகட்டத்தில்,
வாத்தியார்: சும்மா விதண்டாவாதம் பண்ணாதை. உப்பிடிக் கதைக்கிறதுக்கு உந்த வெள்ளைச்சட்டை போட்ட பாதிரியள் உனக்குக் காசு தந்திருக்கிறாங்கள்.
எடுபடி: இதுதானே உங்கட புத்தி கதைக்கமுடியாமல் போனவுடன அதகடிக்கிறது. நீ பொய் சொல்லிறாய். துரோகி. புறத்தியான் காசு தந்திருக்கிறான் என்று கதையைக் கிளப்பிவிடுறது. உண்மையை ஏற்றுக் கொள்ளாமல் இப்படிச் செய்யுறதின்ர பலனை எல்லாம் நீங்கள் அனுபவிக்கிறத நாங்கள் பாக்கத்தானே போறம்.
வாத்தியார்: நாங்கள் ஆகமத்தில் சொல்லிறதின்ர வழியில நடக்கிறம் அதுக்கு எங்கள ஏன் குறை சொல்லுறாய்.
எடுபிடி: எளிய சாதியார் கோயிலுக்க வந்தால் தீட்டு. கிணத்தில தண்ணி அள்ளினால் தீட்டு கிளாசில தண்ணி குடிச்சால் தீட்டுவீட்டுக்குள் விட்டால் தீட்டு என்று சொன்ன ஆகமங்கள் கோயில் வீடு கட்டுற வேலை கிணறு வெட்டுற வேலை வீட்டில சட்டிபானை கழுவிற வேலையையெல்லாம் சூத்திரரைக் கொண்டு செய்யுறதைப்பற்றி என்ன சொல்லியிருக்காம்?
வாத்தியார்: எங்கட ஆகமங்கள் சும்மா இல்லை. பாவத்துக்கும் தோசத்துக்கும் நிவர்த்தி வழி சொன்ன ஆகமங்கள் தீட்டு நிவர்த்திக்கும் வழி சொல்லித்தான் இருக்கு. அதுதான் அவை தொட்ட தீட்டைக் கழிச்சுப் போட்டுத்தானே நாங்கள் பாவிக்கிறம்.
எடுபிடி: தாழ்ந்த சாதியாரிடத்தில் போசனம் பண்ணுதல் ஆகாது எண்டு சைவ வினாவிடையில் சொன்ன ஆகமங்கள் கள்ளுக் கொட்டில்ல எல்லாரும் வாய் வைச்சுக் குடிக்கிற பிழாவில கள்ளுக் குடிக்கேக்க எப்பிடித் தீட்டுக் கழிக்க வேணும் எண்டும் சொல்லியிருக்கோ?
வாத்தியார்: இஞ்ச சும்மா… சைவசமயத்தையும் எங்கட ஆகமங்களையும் கொச்சப்படுத்தாத கண்டியோ.
என்று யாழ்ப்பாணத்து சைவ வேளாளனின் -புத்திசாலிபோல் நினைக்கும் முட்டாள் தனமான விவாதங்களோடு நாடகம் நகர்ந்து கொண்டிருந்தது. அப்பப்போ தூங்க்கொண்டிருக்கும் பாணர் திடுக்கிட்டு எழும்புவதும் தனது காணிகளைப்பற்றிய கவலையில் அழுவதும் நடந்து கொண்டிருக்க தொடர்ந்தும் கணக்குப்பிள்ளையும் வாத்தியாரும் பாணருக்கு புத்தி சொல்லி விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒருகட்டத்தில் எடுபிடி எதேச்சையாகச் சொன்ன சூனியம் என்பதைப் பிடித்தக் கொண்டு பாணருக்கு தலையில் திரும்பவும் மிளகாய் அரைக்கத் தொடங்கினார்கள். பாணரின் காணிகளை மீட்க சூனியம் செய்வதே ஒரே வழி என்பதில் திடகாத்திரமானார்கள். பாணருக்கு நம்பிக்கையில்லாமல் போக இதொண்டும் புது விசயமில்லைப் பாணர், காணிப்பிரச்சனை தொடக்கம் கலியாணத்தக் குழப்புறது வரைக்கும் காலங்காலமாக நாங்கள் செய்யுற வேலைதான் என்று கணக்கு சூனியத்தின் மீதான நம்பிக்கையைப் பாணருக்கு கொடுக்கிறான். பாணரும் சரி எதாவது நடந்து தன்ர காணி வந்தால் போதும். யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்று கடவுளில் பாரத்தைப் போட்டு சம்மதிக்கிறார். எடுபிடி பாணரை எச்சரிக்கிறார். உங்கட நன்மைக்காக என்று இவர்கள் ஏதோ செய்து கொண்டிருக்கினம். கடைசியா உங்கட தலையில் மொட்டை அடிச்சசு மிளகாய் அரைச்சு கடைசியில் நடுரோட்டில கோவணத்தோட நிப்பாட்டப் போகினம் ஏதோ புத்தியைப் பாவியுங்கோ. என மிரட்டுகிறார். அனால் யாரும் கேட்கவி;ல்லை. கணக்கும் வாத்தியாரும் சூனியம் செய்வதிலேயே குறியாய் இருக்கிறார்கள். சூனியம் செய்து சிங்கனை போராயுதத்தால் வீழ்த்துவதே இவர்கள் கனவு. தங்கள் பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்து சண்டையை நடாத்தச் சொல்லி அதற்கு தாங்கள் காசு தருவதாகவும், தாங்கள் அங்கு பெரிய புரளி கிளப்பி அங்குள்ள தலைவர்களோடு தாம் பேசி வெண்டு தருவம் எண்டு சொன்னதாகச் சொல்ல,
எடுபிடி: றோட்டில ஒரு குரங்கு நின்று ஆடினாலே நூறு சனம் வேடிக்கை பார்க்கும்.ஒரு இலட்சம் செம்மறி கூடி நின்று கூத்து நடாத்தினால் உலகமே சுத்தி நிண்டு புதிம் பார்க்கும்.கடைசியில் வேடிக்கை பார்த்தவன் தன்ரபாட்டில போடுவான். அதால ஒரு பயனும் வரப் போறேல்ல. கடைசில நீங்கள் முட்டாள் ஆகுறதுதான் மிச்சம்.
வாத்தியார்: அதுக்குத்தான் இப்ப நாங்கள் சூனியம் செய்யச் சொல்லுறம். சூனியம் செய்தால் சிங்கள் அழிஞ்சு போவான். அதுக்குப்பிறகு எங்கட ஆதிக்கம் தானே.
எடுபிடி: சட்டாம்பி, அன்றைய சைவக் குரவர் தொடங்கி இன்றைய வெளிநாட்டப் பாதிரிகள் வரைக்கும் பேராசான்கள் தொடங்கி மதியுரைஞர் வரைக்கும் சுயநலத்துக்காக வால் பிடிக்கிற முதுகெலும்பில்லாத பச்சோந்தி அரசியல்வாதிகள் தொடக்கம் இண்டைக்கு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அரசியல் ஆய்வாளர்கள் வரைக்கும் என்ன செய்யினம்? அதிகாரத்தில இருக்கிறவனைப் பந்தம் பிடிச்சு அவன் செய்யுற முட்டாள் தனத்திற்கெல்லாம் புத்திசாலித்தனமான விளக்கம் கொடுத்துக் கொடுத்துக் கொண்டுதானே இருக்கினம். கடவுள் செய்த பிழையை நெற்றிக் கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று சாம்பலாய் போனவன் ஓருத்தன். நீங்கள் எல்லாம் நெத்தியில கண்வைச்சு பொட்டுவிழும் எண்ட பயத்தில ஆமாம் போட்டுக் கொண்டிருக்கிறியள். கடைசியில உங்கட தலைவர்களோட சேர்ந்து நீங்களும் அழியப் போறியள்.
வாத்தியார்: அதென்னண்டு? நாங்கள் படிச்சனாங்கள். அவைக்கு மதியுரைச்சுக் கொண்டுதானே இருக்கிறம். அவை கேக்காட்டி அது அவைக்குத்தானே அழிவு.
எடுபிடி: அதுசரி. அழிஞ்சவுடன அடுத்து வாற ஆளுக்கு வெட்கமில்லாமல் வால் பிடிப்பியள். முன்னுக்க நிக்கேக்க மட்டும் நீதான் சூரியத்தேவன், தீர்கதரிசி எண்டு உச்சி குளிரப் பணணுவியள். கொஞசம் தண்ணி உள்ளுக்க போனவுடன தனியப் பிடிச்சுக் கேட்டால் அவன் மொக்கன். ஒருதற்ற சொல்லும் கேளான் எண்டு கையைக் கழுவுவியள்.
வாத்தியார்: எங்கட வேலை செய்யுற வேலைக்கு விளக்கம் சொல்லுறதுதான். அதோட எங்கட அலுவல் சரி.
எடுபிடி: அதால வாற அழிவுக்கு நீங்கள் பொறுப்பில்லைத்தானே. முட்டாள்களின்ர வேலைக்கு புத்திசாலித்தனமான விளக்கம் சொல்லுவியள். அண்டைக்கு இத்தனை சைவக் குல யாவாரிமார்கள் இரக்கத்தக்கதாக நல்லூர் கோவிலுக்கு கற்பூரம் விக்க ராசா பட்டயம் கொடுத்துது சோனகருக்குதான். அவை இண்டை வரைக்கும் அதைச் செய்யினம். அந்த ராசாவுக்குப் புத்தியிருந்தது. அவனைச் சுத்தி மதியூகி மந்திரிமார் இருந்திச்சினம். அவை வழியைக் காட்டினபடியால் அந்தச்சனத்தை எங்கட சனமாய் நினைச்சு ராசா நீதி கொடுத்தான். அவன் நினைச்சிருந்தால் சில மணிநேரத்தில வெளியேறச்சொல்லி உடுத்த உடுப்போட நகை நட்டுக்களை காதில இருந்து புடுங்கிப்போட்டுக் கலைச்சிருக்கலாம். வீடுகொடுக்கிற ராசாவுக்கு கொள்ளி எடுத்தக் குடுக்கிற மந்திரிமாதிரி, கடைகெட்ட அயோக்கியன் ராஸ்கல்கள் எல்லாம் மதியுரைஞர் அரசியல் பிரிவுத்தலைவர் ஆய்வாளர் எண்டுசுத்தி நிண்டு கொண்டு ஆமாம் சாமி போட்டால் தலைவன் எப்படி உருப்படுவான்? தலைவனுக்கு ஒழுங்காப் புத்தி சொல்லியிருந்தால் இந்தளவு சனமும் அழியாமல் தப்பியிருக்கும்;. அதோட தலைவன் இண்டைக்கும் இருந்திருப்பான்.
பாருங்கள் குருசேவின் கோபம் எப்படிப்பட்டது என்பதை. உண்மையில் எங்கள் எல்லோருக்கும் இருக்கும் கோபமும் அதுதான். இந்த நாடகத்தில் நடித்த நாங்கள் அனைவருமே மிக உணர்ச்சிவசப்பட்டிருந்தோம். ஆரம்ப நாடகப் பயிற்சியின் போதும், இறுதிநாள் வரையும் அதே உணர்வும் கோபமும் எங்கள் அனைவருக்கும் இருந்தது. ஏறத்தாள இரண்டு மணிநேர நாடகம். நாடகத்தின் ஒவ்வொரு வரிகளையும் கடைசிவரை இரசித்தோம். அது எங்கள் வாழ்வாக நமது வரலாறாக இருந்ததே அதற்கு முக்கிய காரணம். ஒரு இனத்தை சாதியும் சாதியின் அரசியலை அந்த இனத்தின் அரசியலாகவும் முன்வைத்த இனம் தமிழருடையது. அதனை குருசேவ் அவர்கள் தனது பிரதியில் இயலுமானவரை அப்பட்டமாக சொல்லியுள்ளார். -எப்போதும் தான் எழுதுவதும் நினைப்பதும் அதே அர்த்தத்தில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்னால் பூடகமாக ஒருபோதும் சொல்ல முடியாது. எனது கருத்தை நேரடியாக முன்வைப்பவன் நான்- எனச் சொல்லும் குருசேவின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பவர்கள் அறிவார்கள். தாயகத்தில் ஏடிட்டோர்இயல் என்றாலும் சரி கியூறியஸ்.ஜியின் எழுத்துக்கள் என்றாலும் சரி. தனது கருத்து எப்போதும் நேரடியானது என்பதே அவர் கருத்து. நமது பழம்பெரும் இலக்கிய விமர்சகர்கள் சஞ்சிகையாளர்கள் போல் “இங்குள்ள பலர்’ “அவர்களில் சிலர்” “ஜெ என்ற எழுத்து நடிகை” என்று எழுதிவிட்டு நன்றாகக் குடுத்திருக்கிறேன் பார் எனச் சொல்லும் எழுத்தாளனல்ல நான் என்று தமாஷாகச் சொல்வார் குருசேவ். தாயகம் பத்திரிகைக்குப் பின் அல்லது புலிகள் அழிந்த பின் குருசேவ் சும்மா இருக்கிறார் என்றுதான் பலர் நினைத்தார்கள். ஒரு இனத்தின் வரலாற்றை அதன் கோரத்தை படம் போட்டுக் காட்டியிருக்கிறார். நாம் ஒரு நாடகம் வேண்டும் எனக் கேட்டபோது அவர் மறுக்காமல் நான் நிறையச் சொல்ல இருக்கிறது. செய்வேன் என்றுதான் சொன்னார். ஒரு வருடத்தில் அதனை இயக்கி மேடையேற்றிவிட்டார்.
2.
நாடகத்தின் இரண்டாம் கட்டம் சூனியம் செய்யும் ஐயர், எடுபிடி, பாணருடன் தொடங்குகிறது. வாத்தியார் கணக்கு பக்திப் பரவசத்தில் சுற்றி நிற்கிறார்கள். சூனிய ஐயர் வாடா கறுப்பா வந்திடு வந்திடு என்று உரு ஏற்றுகிறார். பேய் ஒவ்வொருவரிலும் மாறி மாறி ஏறுகிறது. முதலில் பேய் வாத்தியாரில் ஏறுகிறது.
ஐயர்: யாரடா நீ ஆரடா சொல்லடா உன் பேரடா
என்று வேப்பிலை அடிக்க உடுக்கு அடியில் பேய் கலையாடியவாத்தியார்
வாத்தியார்: நான்; பருத்தித்துறையான்
அடிதடி: அரோகரர்… ரமா ராமா ராமநாதா அரோகரா …
கணக்கு: சாமான் விசயம் தெரிஞ்சாள் மாதிரித்தான் கிடக்குது நாங்கள் இனி உதுக்குப் பின்னாலதான்
அடிதடி: என்னடா இது காரில போற பெரியாக்கள் மாதிரி கையைக் காட்டிக் கொண்டு போகுது.
எடுபிடி: சிங்கன்ர ஆக்கள் அதைத் தேரில வைச்சு இழுத்தவை. அந்தப் பழக்கத்தில் தான்.
ஐயர்: போடா நெருப்பா பொங்கி எழுந்திடு
போராயுதம் கொண்டு சிங்கனைக் கொண்டிடு.
வாத்தியார்: நோ… நோ… நாங்கள் சமாதானமாய் இருக்கோணும். சண்டைபிடிக்கக் கூடாது.
கணக்கு: ஐயா என்ன இது போய்க் கொண்டிட்டு வா என்று சொன்னால் சமாதானம் பேசிக் கொண்டடிருக்கு. அந்நியன் விட்டுட்டுப் போகேக்க எங்கட உரித்தைப் பிரிச்சு வாங்காமல் நாங்கள் எல்லாம் ஒண்டு சண்டைபிடிக்கக் கூடாது எண்டு எங்களுக்குத் துரோகம் செய்யுது. ஐயா இதைக் கலையுங்கோ.
இப்படி மாவிட்டபுரத்தான் ,ஊர்காவற்துறையான், நிச்சாமத்தான், காங்கேயன்துறையான், தெல்லிப்பளையான், வட்டுக்கோட்டையான் என்று வாத்தியாரிலும் கணக்கிலும் பேய் ஏறுகிறது. எல்லாவற்றிகும் அடிதடி அரோகராப் போடுவதும் பின்பு ஆள்மாறி மாறித் துரத்துவதுமாக நாடகம் நடந்து கொண்டிருக்கிறது.
கடைசியில் பேய் ஏறிற்pச் சரிவரவில்லை என்று பில்லியை வரவழைக்கிறார் ஐயா. பில்லி அடிதடியில் டீறுகிறது. ஏல்லோர் முகத்திலும் சந்தோசம் களைகட்ட பில்லியை அனுப்புகிறார்கள். பில்லி போய் அடித்துடைக்கிறது. பல வெற்றிகள். பில்லி பிள்ளைகளைப் பலி கேட்கிறது. பாணர் குழம்புகிறார். கணக்கும் வாத்தியாரும் சந்தோசம் பொங்க குதூகலிக்கிறார்கள். தமது பிள்ளைகள் வெளிநாட்டில் தானே யார் பிள்ளையைப் பில்லி பலியெடுத்தால் என்னெண்டு நினைப்பு அவர்களுக்கு. ஒரு கட்டத்தில் பில்லி பின்வாங்குகிறது. நல்லா உள்ளுக்க வரவிட்டுட்டு அடிக்கப்போகுது என்றும் விசயமில்லாமல் திரும்பி வராது பில்லி என்றும் பெரிசாப்pளான் ஏதோ வைத்திருக்கிறது என்றும் வாத்தியாரும் கணக்கும் சமாதானப்படுகிறார்கள். பில்லி வெள்ளைக் கொடியோடு புத்தம் சரணம் கச்சாமி என்று போகிறது. தலையில் கைவைத்து சனியன் என்ன புத்த மதத்திற்கு மாறிவிட்டதா என்று கணக்கும் வாத்தியும் புலம்ப எடுடிபிடி டேய் அது வந்து சிங்களமில்லை இங்கிலீஸ். ஆமி என்னை கச் பண்ணு என்று சொல்லி சரண் அடையப் போகுது என்று நக்கலடிக்கிறார். கடைசியில் பில்லி செத்துப் போக , கணக்கும் வாத்தியாருக்குள்ளும் சண்டை வந்து பிரிகிறார்கள். செத்ததை வெளியில் சொல்ல வேணும் என்கிறார் வாத்தியார். சொல்லக் கூடாது சொன்னால் துரோகம் என்கிறார் கணக்கு. பின் வட்டுக் கோட்டை- நாடுகடந்த அரசு என்று பிளவு. பின் சரத்பொன்சேகா சம்பந்தன் பேய்கள் கிளம்பிவருகிறது ஆள்மாறி மாறித் துரோகிகளாகிறார்கள். ஒருவரை ஒருவர் துரோகி என்கிறார்கள். இந்தத் துரோக்கிகள் கத்தல் பெரிய நாய் கூட்டம் குலைப்பதில் முடிகிறது. இதுவரை அரேகரா போட்டுக் கொண்டிருந்த அடிதடி களைத்துப்போனது.
உண்மையில் இந்த நாடகத்தின் உருவாக்கத்தில் மிகப் பொரும் பங்காற்றியவர் பேராதரன். எம்முடன் அயராது உடுக்கு அடித்து எம்மை ஆடவைத்து நாடகத்திற்கு அதிகளவு மெருகூட்டியவர் அவர். மேலும் இந்த நாடகத்திற்கு ஒத்துழைப்புத் தந்த நண்பர்களுக்கும் மற்றும் திரும்பத்திரும்ப விளம்பரம் போட்டஇணையத்தளங்களுக்கும் பேஸ்புக் நண்பர்களுக்கும் மிகுந்த நன்றிகள்.
படங்கள்: ஊரவன்