வடலி வெளியீடுகளான நான்கு நூல்கள் அறிமுகத்தில்
தேவதைகளின் தீட்டுத்துணி.
கற்சுறா
ரொரன்ரோ தமிழ் இலக்கிய உலகமும் வழமையான தமிழ் இலக்கிய உலகம் போல் மிக விசித்திரமானது. எப்போதும் தனக்கு முரணானது குறித்து பேசுவதற்கு அச்சப்படும். தனக்கு இயைபான தன்னுடைய இருத்தலுக்குத் தீங்கு விளைவிக்காத ஒரு பாதையை அது எப்போதும் தெரிவு செய்யும். மிகக் கேவலம் என்னவென்றால் பரந்து பட்ட கருத்தியலுக்குள் விவாதத்தைத் தொடங்குவாதாக பொதுவெளியில் பாசாங்கு காட்டினாலும் ஒரு தலையாட்டியாய் ஒரு கிறீஸ் மனிதனாய்த்தான் உள்ளுக்குள் தமிழ் இலக்கிய உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது. ரொரன்ரோ தமிழ் இலக்கிய சூழலும் இதற்கு விதிவிலக்கல்ல. வெளியில் ஒருகதை உள்ளுக்குள் ஒரு கதைதான். இதற்குள் இருந்துதான் மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது.
09 Oct 2011வடலி வெளியீட்டகத்தின் நான்கு நூல்கள் அறிமுக நிகழ்வு Scarborough civic centre 150 Borough Drive. Scarborough, Ontario
இல் நடந்தது. நிகழ்விற்கு தில்லைநாதன் அவர்கள் தலமை தாங்கினார். அறிமுகத்தை மயூ மனோவும் அருண்மொழிவர்மனும் ரதனும் நானும் செய்தோம். 1980களின் ஆரம்ப காலங்களில் மல்லாவியில் நடைபெற்ற எற்த அரசியற் கூட்டங்களானாலும் தில்லைநாதன் அவர்களின் பேச்சில்லாத கூட்டம் இருக்காது. அவர் ஈழப் புரட்சியமைப்பின் சார்பில் பேசுவார். முரண்பாடுகளுக்கப்பால் குறிப்பிட்ட இயக்கங்கள் சில ஒன்றாக கூட்டத்தில் பேசக்கூடிய காலம் அது. புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, ஈரோஸ் அமைப்புக்கள் ஒரு பொதுக்கருத்தில் ஒன்றாகக் கூடிக் கூட்டம் வைக்கக் கூடிய காலமாக 80களின் ஆரம்பங்கள் இருந்தன. மிக அவதானமாக அந்த மக்களின் வாழ்விலிருந்து உணர்ந்து கொள்ளும் பேச்சாக இருக்கும். ஈ.பி.ஆர்.எல்.எவ் ரொனால்டும் ஈரோஸ் தில்லைநாதனும் இல்லாத கூட்டம் -சப்- என்றிருக்கும் எங்களுக்கு. அப்போது எனக்கு இரத்தம் சூடேறக்கூடிய 15, 16 வயது. அவரது பேச்சுக்காகக் காத்திருப்போம். ஈழவிடுதலைப் போராட்டத்தில் தனது ஒருபக்க வாழ்வைத் தொலைத்தவர் அவர். இன்று அவர் கூட்டத்தைத் தலைமை தாங்க அதில் நான் பேச கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. அவரிடமிருக்கும் பல்வேறு அனுபவங்கள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்ய வேண்டுமென்ற தேவையை கூடியிருப்பவர்கள் கருதுவேயி;ல்லை. முடிந்தவரை அவை பதிவு செய்யப்படவேண்டும்.
கூட்டத்திற்கு ஒரு கிழமையின் முன் வடலி வெளியீட்டகத்து நான்கு நூல்கள் அறிமுகம் நடைபெறவுள்ளதாகவும் அதில் கலையரசனின் நூலை என்னை அறிமுகம் செய்யமுடியுமா என்பதாக தா. அகிலன் கேட்டார். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கனடாவில் யாரும் என்னை எதுவும் பேசக்கேட்டது இல்லை. சரி ஆள் இல்லாமல் கேட்கிறார் என்று நினைத்தும் கேட்டதை ஏன் விடுவான் என்று நினைத்தும் உடனே ஓம் என்றேன். ஆனால் கலையரசன் புத்தகம் குறித்து நான் எதுவும் அறியவில்லை. அவருடைய கட்டுரைகளை வாசிக்கவில்லை அதனால் 7நாளில் அதுகுறித்துத் தேடமுடியாது என்று சொல்லிவிட்டேன். தேவதைகளின் தீட்டுத்துணி சிறுகதைத் தொகுப்பைத் தந்தால் நான் தயார் படுத்துவேன் ஏனென்றால் அதுபற்றி வந்த குறிப்புக்களையாவது வாசித்திருக்கிறேன். யோ. கர்ணன் கதைகள் இரண்டு வாசித்திருக்கிறேன். நான் புத்தகம் பார்க்கவில்லை. ஆனால் தந்தால் எனக்கு 7நாள் போதும் என்றேன். அப்படியில்லை கொலை நிலம் குறித்து செய்வதாக இருந்தால் எனக்கு புத்தகமே தேவையில்லை நான் இரண்டு மணிநேரம் பேசுவேன் தருவீர்களா என்று கேட்டேன் அகிலன் சிரித்தார். பலமாகச் சிரித்தார். பின் அருண்மொழிவர்மன் செய்கிறார். அதனை மாற்றமுடியாது என்றார். நானும் சும்மா பகிடிக்குக் கேட்டேன் என்றேன். பின் மயூமனோவிடம் இருந்து யோ. கர்ணனது தேவதைகளின் தீட்டுத்துணி நூலை வாங்கினேன்.
இனி நான் அங்கு பேசியதும் பேசாததும்…
தேவதைகளின் தீட்டுத்துணி. மிக அருமையான தலைப்பினைக் கொண்ட சிறுகதைத் தொகுப்பு. 10க் கதைகள் அடங்கியது இந்தத் தொகுப்பு. தொகுப்பின் சில கதைகளை ஏற்கனவே வாசித்திருந்தாலும் ஒருகிழமைக்கு முன் கிடைக்கப் பெற்றாலும் வாசிக்கும் போது மிகுந்த பரிச்சயத் தன்மைக்கு வந்து விட்டன அக்கதைகள்.ஆகஸ்ட் 2010இல் அச்சுக்குச் சென்ற இக்கதைகள் அதிகமானவை 2009 மே மாதத்திற்குப்; பின் அதவது முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின் எழுதப்பட்டவை. முழுக்க வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போர்க்காலங்களை மையப்படுத்தி எழுதியவை. அதனால் தான் அவை மிகச் சுலபமாகப் பரிச்சயமடைந்து விட்டன. பொதுவாக நாம் அனுபவித்த கேள்வியுற்ற சம்பவங்கள் கதையாகியிருக்கின்றன.
2. இந்தத் தேவதைகளின் தீட்டுத்துணித் தொகுப்பிற்கு பின்னரே எனக்கு யோ.கர்ணண் அறிமுகமாகிறார். அவருடைய கடந்த காலம் என்பது அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து செயற்பட்டார் என்பதற்கப்பால் எதுவும் தெரியாது. அவர் என்ன எழுதினார்? என்ன கருத்தைக் கொண்டிருந்தார் என எதுவும் தெரியாது. இந்தக் கதைகள் மூலம் அறிமுகமாகும் யோ. கர்ணன் அவர்களது எழுத்து குறித்து உண்மையில் இப்போது அப்பட்டமாக எதையும் சொல்லிவிட முடியாது.
ஏனெனில் நாம் கடந்து வந்த யுத்தம் என்பது அசிங்கத்தால் நிரம்பியது. வெறும் ரத்தங்களாலும் சதைகளாலும் அழுகுரல்களாலும் நிரம்பியது என்ற பகட்டுச் சொல்லாடலை விடுத்து சுயநலங்களாலும் முட்டாள்தனங்களாலும் ஏமாற்று வார்த்தைகளாலும் துவேசங்களாலும் வெறியூட்டல்களாலும் நிரம்பியது என்பதை நாம் இன்னும் ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் தான் சொல்கிறேன் கர்ணனது எழுத்துக்கள் குறித்து இப்போதைக்கு எதையும் அப்பட்டமாகச் சொல்லமுடியாதுஎன்று.
உண்மையில் இந்தத் தேவதைகளின் தீட்டுத்துணி சிறுகதைத் தொகுப்பிற்கு இருக்கின்ற முக்கியத்துவம் என்னவென்றால் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் நடைபெற்ற யுத்தங்களுக்கிடையில் ஒரு போராளியாக வாழ்ந்த – அதில் பங்கு கொண்ட ஒருவர் தனது சாட்சியங்களைக் கதையாகப் பதிவு செய்வது என்பதே. அந்தக் கதைகள் சொல்லும் உண்மைத் தன்மை என்பதை- யோ. கர்ணன் போன்றவர்கள் தான் பதிவு செய்ய முடியும். அந்த வகையில் இறுதியுத்தம் ஆரம்பிக்கப்பட்டு அது முள்ளிவாய்காலில் முடியும் வரையான இரண்டுவருட காலப்பகுதியில் பெறப்பட்ட அனுபவங்களை தன்னளவில் பதிவு செய்திருக்கிறார். விடுதலைப்புலிகளிடமிருந்தும் இராணுவத்திடம் இருந்தும் தம்மைப்பாதுகாக்க மக்கள் பட்ட அவஸ்தைகள் கதையெங்கிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தளவில் இந்தத் தொகுப்பின் அவசியம் இருக்கிறது. முக்கியமாகிறது.
6. புலிகள் இயக்கத்திற்கு விரும்பியும் கட்டாயத்தின் பேரிலும் போனவர்களுக்கு இந்தத் தமிழ்ச் சமூகத்தின் மீதிருக்கும் கோபம் மிகப்பெரியது. அவர்கள் யாரையுமே இந்த சமூகம் தன்னுடைய அங்கத்தவர்களாகப் பொதுவாழ்வில் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அப்படியிருக்க அங்கவீனர்களாகத் திரும்பிவந்தவர்களை பொதுவாழ்வில் இந்த சமூகம் எந்தத்தளத்தில் ஏற்றுக் கொள்ளும் என்பதை நாம் மிக இலகுவாக உணரலாம்.
இத்தொகுப்பில் இரண்டாவது கதை மன்னிக்கப்படாதவனின் கைத் தொலைபேசி என்ற கதை. அதில் வரும் அப்பண்ணா என்ற பாத்திரம் இயக்கத்தை விட்டு விலத்தி கொழும்பில் நிற்கிறார். ஒரு காலில்லை. அந்த பாத்திரம் இந்த சமூகத்திற்கு சொல்கிறது
எனக்கு ஒரு காலில்லை ஏன்? நான் போராடின்னான்.
எனக்கு வேலையில்லை ஏன்? நான் போராடின்னான்.
எனக்கு ஒரு உறவில்லை ஏன்?… நான் போராடின்னான். என்று இந்தச் சமூகத்தின் மீது கோபப்படுகிறது.
7. பெயர் என்ற சிறுகதை இயக்கத்தில் சேர்ந்தவுடன் வைக்கப்படும் பெயர். மற்றும் கடைகளுக்கு வைக்கும் பெயர்களில் சுத்தத் தமிழ் இருக்க வேணும் என்று கட்டாய சுத்ததமிழ்ச் சட்டம் புலிகளால் கொண்டுவரப்பட்டது. வெதுப்பம் வெதுப்பி என்று இயக்கம் அல்லோல கல்லோலப்பட்ட நேரம் ஒருவன் படும் அவஸ்தையைச் சொல்லிச் செல்கிறார். ஆனால் பாருங்கள் மகிழூந்து தொடக்கம் உலங்கு வானூர்தி வரை சுத்த தமிழ்ப் பெயர் மாற்றிய புலிகள் லெப்ரினன் கேணல் செக்கண்ட் லெப்பிரின் என்பவற்றை கடைசிவரை புலிகள் மாற்றவில்லை. அவர்களுக்குத் தெரியும் அவற்றை தமிழ்ப்பெயருக்கு மாற்றினால்அது கட்டாயம் அசிங்கமாக இருக்கும் என்பது. (இவற்றை திரும்பத் திரும்பச் சொல்வதால் புலியெதிர்ப்பு புலிக் காய்ச்சல் புலிகளைக் குற்றம் சொல்வது வசைபாடுவது என்று குறை சொல்லும் நண்பர்களுக்கு திரும்பத் திரும்பச் சொல்கிறோம் புலிகள் அழித்தது ஒரு நபரையோ ஒருகுழுவையோ அல்ல. தமிழ்த் தேசியம் என்ற பெயரில் மூன்று இனத்தை. மூன்று காலத்தை அதன் வரலாறை என்பதைக் கவனியுங்கள்)
அடுத்து தஸ்யுக்களின் பாடல்கள் ஒரு அரூப மொழியில் எழுதப்பட்ட சிறுகதை.இது எந்தக்காலப்பகுதியில் எழுதப்பட்டது என்பது தெரியவில்லை. யோ.கர்ணன் அவர்களது சூழலில் 2009க்குப் பின் இந்தக்கதை எழுத அவசியமில்லாமல்தான் இருக்கிறது. அந்தக்கதை மிகப்பெரிய ஒரு வரலாற்றைத் தன்னகத்திலிருந்து வெளிப்படும் மொழிகளுக்குள்ளால் பிரித்துக்காட்டத் தோன்றியபோதும் அது பூர்த்தி பெறவில்லை. முழுமையடையவில்லை.
தேவதைகளின் தீட்டுத் துணி என்ற சிறுகதை இயக்கத்திற்கு கட்டாய ஆள்பிடித்துக் கொடுத்தவன் தான் மெனிக் பார்மில் ஆமிக்குத் தலையாட்டியாய் இருந்து தப்பிவந்த புலிகளைக் காட்டிக் கொடுக்கிறான். ரூட் கதை தமிழ்ர்களது வாழ்வில் கிளாலி ரூட். கொம்படி ரூட் நந்திக் கடல் ரூட். தாய்லாந் ரூட் என்று எப்பொழுதும் ரூட் மயமாகி இருப்பதைச் சொல்கிறது. இந்தத் தொகுப்பில் இல்hலத அவரது சிறுகதை ஒன்று திரும்பிவந்தவன் எனும் கதை. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளுக்குப் பின் எழுதியதொரு கதை. அவற்றிலிருந்து கொஞ்சம் அதாவது அதன் புனைவுத் தன்மையில் மாற்றமுள்ள கதை. படித்துப் பாருங்கள்.
உண்மையில் ஒரு படைப்பு என்பது கதையோ கவிதையோ எதுவானாலும் காலத்தின் பதிவாக இருப்பது ஒருபுறமிருக்க அவற்றின் புனைவுத் தன்மை பெறுமதி மிக்கதானதாக இருக்க வேண்டும். இங்கு அது சாத்தியப்படவில்லை. வரலாற்றின் பதிவாக இருப்பதற்கப்பால் புனைவுத்தன்மையில் தோற்றுவிடுகிறது. ஒரு வாசகனை இந்தக்கதைகள் ஒருபோதும் குழப்பவதில்லை. மறுமுனையில் தமக்காகத் தயார்படுத்தப்பட்ட தங்களுக்குரிய மொழியிலேயே கதை சொல்லப்படுவதை அவர்கள் நன்றாக விரும்புகிறார்கள். சிலாகிக்கிறார்கள். இந்தப்புத்தகத்தில் இடம் பெறும் அநேக கதைகள்… றூட் கதையானாலும் சரி சுதந்திரம் கதையானாலும் சரி மிக இலகுவாக வாசகனைக் கைப்பற்றி விட மொழி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது வாசகன் வழமையாக உரையாடும் மொழியிலேயே கதை சொல்லப்படுகிறது. ஒரு கதை வாசித்து முடிந்தவுடன் வாசகனின் மனதிற்குள் கதை ஆரம்பிக்க வேண்டும். அத்தன்மை இந்தக் கதைகளில் நிகழவில்லை. வெறும் சம்பவங்களின் கோர்வையாக பரவிவிடுகிறது.
வாசிக்கும் போது அத்தகைய தருணங்களை க. கலாமோகனின் கதைகளில் காணமுடியும். பாருங்கள் கடைசிப்புத்தகம் கதை உயிர் மெய்5இல் வந்தது.
-நான் அவளைக் கற்பழித்தேன். எனது பசி முடிந்ததும் அவள் என்னிடமிருந்து தப்புவதற்காகக் கெஞ்சினாள். நான் அவளது கழுத்தைத் திருகினேன். துடித்தாள். மீண்டும் கெஞ்சினாள்.அவள் வழிகள் மூடப்படும் வரை நான் அவளைத் திருகினேன். அவளது பிணம் நிர்வாணமாக. நான் பொலீஸ் ஸ்ரேசன் சென்று நான் இளம் பெண்ணைக் கற்பழித்தும் கொலையும் செய்து விட்டேன். எனச் சொன்னேன். எனக்குப் பைத்தியம் எனச் சொல்லி என்னை அவர்கள் வெளியே துரத்தினார்கள். மறுநாள் காலைப் பத்திரிகையில் அவள் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட செய்தியும் அவளைக் கொன்றவன் படமும் இருந்தது. அது எனது படமாக இருக்கவில்லை.- என்று கதை தொடங்கும். கதை வாசகனை உள்ளாரக் கொல்லவேண்டும். இல்லையேல் கதை சொல்லி வாழமுடியாது. இது யோ. கர்ணனது கதைகளில் நிகழவில்லை.
மற்றது இந்தத் தேவதைகளின் தீட்டுத் துணி எனும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு நாம் ஆரம்பத்தில் கேள்விப்பட்டிராத பேசாப் பொருட்களைப் பேசுகின்றன எனச் சொல்லப்படுகிறது.
விடுதலைப் புலிகள் குறித்த எதிர்வினைக் கதைகள் அல்லது கட்டப்பட்ட தமிழ்த் தேசியம் குறித்த எதிர்வினைக் கதைகள் விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலங்களிலேயே வந்திருக்கிறது. ஆனால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து எழுதமுடியாது – எழுதப்படவில்லை என்பது உண்மையாயினும் புலம் பெயர் தேசங்களிலும் தமிழர்கள் வாழ் பகுதிகளை முடிந்தளவு தமது கட்டப்பாட்டில் தான் வைத்திருந்ததார்கள். விடுதலைப்புலிகளின் அழிவின் கடைசியில் வெளியேறிய யோ. கர்ணன் அவர்கள் வன்னிப்பிரதேசங்களில் புலிகளின் வன்முறை கொடிகட்டிய தருணங்களில் கட்டாயபிள்ளை பிடித்த அந்த 2000ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் என்ன மனநிலையில் இருந்தார் எவ்வiகான கதைகளை எழுதினார் என்பது நமக்கு முக்கியம்.
இன்று சொல்லப்படும் பேசப்படாத விடையங்கள் என்பதை சக்கரவர்த்தி 1990களில் எழுதினார்.
ஒரு மருதமுனை முக்கால்.. என கொச்சத்தனமாக சொல்லும் கணபதி என்ற தமிழ் ஈழத்தவனால் ஒரு1500ரூபாக் காசுக்காக அந்த முஸ்லீமை கொலைசெய்து கையோடு கம்மாரிசு அடிக்கும் அற்புதமான சிறுகதையை சக்கரவர்த்தி எழுதியபோது உடலெல்லாம் சிலிர்த்தது. போரின் பகைப்புலம் அறியாது போர்ப்பரணி பாடும் பாட்டுக்காரர் எவரோ -அவரே ஈழம் ஈன்னமும் எரிந்து கொண்டிருக்கக் காரணம் என்பேன் என 90களில் எழுதியவர் சக்கரவர்த்தி. அவரின் யுத்தத்தின் இரண்டாம் பாகம் என்ற சிறுகதைத் தொகுப்பை சபாலிங்கம் கொலை செய்யப்பட்ட மண்ணிலிருந்து நாதன் கஜனைச் சுட்ட மண்ணிலிருந்து தான் வெளியிட்டோம். உண்மையில் அதன் அட்டைப்படம் பார்த்திருப்பீர்கள் கருணா செய்து அனுப்பியபோது மனம் மரணத்தை நனைத்தது. ஆனால் அந்தக் காலங்களில் இருந்து இன்றுவரை எங்களை வெறுமனே புலி எதிர்ப்பாளர்கள் மட்டும் என்று அடையாளப்படுத்தியவர்கள் பலர்.
புனாவும் அதன் துனாவும் என்று ஒரு இன்னரலிஜன் புலிப் பெண் தனது கணவனையே கொல்லும் கதையை ஜீவா எழுதினார். அவற்றை சமூகம் வெறும் புலி எதிர்ப்பக் கதை என்று அப்போது பேசாது மௌனம் காத்தது.
ஆக எழுதப்படும் காலங்கள் முக்கியம். ஆனாலும் விதுல்ராசாவைப்போல் தீபச் செல்வனைப்போல் அல்ல யோ. கர்ணன் என்பதை அவரின் எழுத்துக்கள் நமக்குக் காட்டுகின்றனதான்.
மற்றது இந்தத் தொகுப்பிலுள்ள அடிக்குறிப்புகளது தேவை என்ன? ஒரு கதை சொல்லிக்கு இருக்க வேண்டிய தேவையை விடுத்து விளக்கமளிப்புக்கு முனையும் தன்மை எதற்காக உருவாகிறது. மைன்ஸ் என்பதற்கு கண்ணிவெடி என்றும் கிளைமோர் என்பதற்கு ஒருவகை வெடிகுண்டு என்றும் இன்ரலிஜன்ஸ்க்கு புலனாய்வுத் துறை என்றும் லாவோஜித் என்பது ஒருவகைத் தேயிலை என்றும் சோல் பண்ணுவது தீர்த்து வைப்பது என்றும் விலத்தீற்றன் என்பதை விலத்தி விட்டேன் என்றும் அடிக்குறிப்பு விளங்கப்படுத்தல்கள் யாருக்கு இடப்பட்டுள்ளது? கட்டாயமாக இது தமிழ் நாட்டு பதிப்பாளர்களுக்கும் வாசகர்களுக்குத்தான். தமிழ் நாட்டு வாசகர்களைத் திருப்திப்படுத்த வேண்டியநிலைக்கு யோ.கர்ணன் அவர்கள் ஏன் வரவேண்டும்?
அப்படியானால் மொளகாப் பொடிக்கும் சிலுவைராஜ் சரித்திரத்துக்கும் அடிக்குறிப்புக்களாக இன்னொரு புத்தகம் விடவேண்டிவரும்.ஒரு கதை சொல்லிக்கு இருக்கவேண்டிய தேவை ஒரு போதும் அடிக்குறிப்பு விளங்கப்படுத்தல்களல்ல. வாசகன் தேடி வாசிக்க வேண்டும்.
கனடாவில் பார்க்கிங் லொட்டில் பிச்சை எடுத்து பிசாபிசாவில் பிசாத்துண்டு வேண்டினான் என்றோ பாரிசில் செயின் நதிக்கரைத் தெருக்களில் வைன் கோஸ்டிகளுடன் குடித்தது பற்றியோ கதை எழுதினால் தமிழ்நாட்டுக்காரர்களிடம் பெயரெடுத்து விடலாம். மனிசிய புத்திரன் ஆனந்தவிகடன் போன்றவர்கள் சிறந்த சிறுகதை என்ற அவார்டும் தரலாம். ஆனால் கர்ணனுடைய எழுத்துக்கள் அந்த நிலையை பெற்றுவிடக்கூடாது என்பதே எனது விருப்பம்.
இந்தத் தொகுப்பிலும் மற்றும் பின் எழுதிய திரும்பி வந்தவன் போன்ற சிறு கதைகளிலும் ஒரு சிறுகதை எழுத்தாளனுக்குரிய மனம் அந்த வித்தை கர்ணனிடம் பெறக்கூடியதாகவே இருக்கிறது. இருந்தாலும் மனதுக்குள் கிடந்து உருமாறக்கூடிய மனதை மாறி மாறி சிதைக்கக் கூடிய சிறுகதைகளையே புனைவுத்தளத்தில் கர்ணனிடம் நாம் எதிர்பார்ப்பது. மற்றப்படி சம்பவங்களைப் பதிவாக்குவதில் அவை வெற்றியீட்டுகின்றன.