Links
  • அப்படியா?
  • உண்மைகள்
  • உயிர்மெய்
  • எதுவரை?
  • எஸ்.பொ.
  • சகோதரி
  • தலித்தியம்
  • தாயகம்
  • தூ
  • பிறத்தியாள்
  • பெண்ணியம்
  • பெரியார் குரல்
  • மகள் நேயா
  • மல்லிகை
  • வே.மதிமாறன்
  • Recent Posts

    தமிழ் இடதுசாரிகளும் யாழ் மையவாதத்தின் சிந்தனையும்; -சண்முகலிங்கம்.

    December 22nd, 2011

    சண்முகலிங்கம் அவர்கள் கடும் சுகயீனமுற்று கடந்த ஒன்றரை வருடங்களாக படுக்கையிலிருக்கிறார். தற்போது சிறிது முன்னேற்றமடைந்து Craig lee nursing home இல் இருக்கிறார்.

    சமூக அக்கறையாளனாக ஒரு விடுதலைப் போராளியாக தன்னுடைய இளமைக்காலத்திலிருந்து செயற்பட்டுவந்தவர் சண். காந்தீயத்தில் செயற்பட்டதும் சந்ததியார் தொடர்பும் மறுபக்கம் சிங்கள முற்போக்கு சக்திகளுடனான இணைந்த செயற்பாடுகளுமென தன்வாழ்நாள் பூராவும் ஏதோ ஒரு தளத்தில் இயங்கிக் கொண்டிருந்தவர் அவர். கனடாவில் தேடகம் தொடக்கம் மாற்றுச் சிந்தனை குறித்த  அத்தனை விவாதங்களிலும் கலந்துரையாடல்களிலும் செயற்பாட்டாளனாய் முன்னுக்கு நிற்பவர். அவருடன் ஒருபக்கம் சேர்ந்து இயங்குவதும் இன்னொருபக்கம் சண்டையுமாகவே நமக்கு காலம் கழிந்தது. அவருடைய கருத்துக்களில் பல இடங்களில் முரண்படுகிறோம். அவருடைய குறுக்கு வாதங்களும் குழப்படிவாதங்களும் பலருக்கு முகச்சுழிவை ஏற்படுத்தியிருக்கிறது. முகத்துக்கு நேரே பேசிவிடும் அவரது தன்மை அவரிடமிருந்து பலரை விலத்திப்போக வைத்திருக்கிறது. எல்லாவற்றையும் விட அவரிடமிருக்கும் அனுபவமும் தகவல்களும் பெறுமதியானவை. அவற்றை முடிந்தளவு பெற்றுவிடவேண்டுமென்று நினைத்து கேட்டபோது எழுதித் தந்தது இந்தக் கட்டுரை. இது மற்றது இதழ் -2 இல் 2006 ஆண்டு வெளிவந்தது. அவர் எழுதுவதற்கு மினக்கட்டவர் இல்லை. அவர் சமூகச் செயற்பாட்டாளன். தனது கருத்துக்களுக்குரிதாய் வாழ்ந்தவர். ஈழவிடுதலைப் போராட்டங்கள் குறித்தும் சிங்கள இடதுசாரிகள், ஜே.விபியினர் என்று நாம் அறியாத ஆரம்பகாலத் தகவல்கள் நிரம்பவே அவரிடமிருக்கின்றது. அவர் சுகமடைந்து விரைவில் வரவேண்டும்.

    கற்சுறா.

    தமிழ் இடதுசாரிகளும்  யாழ் மையவாதத்தின் சிந்தனையும்;

    -சண்முகலிங்கம்.

    ஓரு மனிதன் பிறந்து,  மனித கூட்டமாக வாழும் பொழுது – அதிகாரம் கொண்ட மனிதர்களால் உருவாக்கப்பட்ட, புரையோடிய சமூகப் பிரச்சனைகளை தன்வசப்படுத்தி, தன்கையில் எடுத்து செயல்ப்படும் போது ஒருமனிதன் பயங்கரவாதியாகவோ, அல்லது சமூக சிந்தனை கொண்ட முற்போக்குவாதியாகவோ உருவாகிறான்.
    இந்த அடிப்படையை வைத்துத்தான் இலங்கையில் உள்ள இடதுசாரிகளை பற்றிய எனது விமர்சனம் அமைந்துள்ளது.
    ஏதோ ஒரு காரணத்துக்காக அவர்கள் மார்க்சிய இடதுசாரிக ளாகவும், சோஷலிச முற்போக்குவாதிகளாகவும் இருந்துள்ளார்கள் என்பதை நான் மறுதலிக்கவில்லை. உலகத்தில் உள்ள இயங்கியல் தத்துவ மேதைகள், தோழர்கள்  இவர்கள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்கள். முதலாளித்துவத்துக்கு எதிராக இவர்களினது கேள்வியோ, விமர்சனமோ அமையவில்லை. இதற்கு மாறாக முதலாளித்துவத்தை வளர்க்க உதவியது. இதனால் மார்க்சியத்தின் இயங்கியல் தன்மை தடைப்பட்டதற்கு இதுதான் மூல காரணமாக அமைந்தது. இந்த விமர்சனத்தை வைத்து முதலாளித்துவவாதிகள் மார்க்சிய தத்துவத்தையும், புரட்சி நடந்த நாடுகளையும் சிதைத்தார்கள். எனவே என் விமர்சனம் அப்படியாக அமையக் கூடாது என்ற எண்ணத்தில் விமர்சிக்கின்றேன்.
    இலங்கையில் இடதுசாரி அமைப்புக்கள் உருவாவதற்கு மூல காரணமாகும் அடிக் கல்லாக அமைந்த அமைப்பு 1924 ம் ஆண்டு யாழப்பாண வாலிபர் காங்கிரஸ் ஆகும். இதை ஆரம்பித்தவர்கள் யாழ்ப்பாணத்தில் உயர் கல்விகற்ற மாணவர்கள் ஆகும். இதில் ஹென்டி பேரின்பநாயகம், ஒறேற்றர் சுப்பிரமணியம், ஜே. வி. செல்லையா, நாகலிங்கம், காரளசிங்கம், வைத்திலிங்கம் நேசையா, நாகலிங்கம், கார்த்திகேசன் மாஸ்ரர், குமாரகுலசிங்கம் சகோதரர்கள், பொன் கந்தையா போன்ற பலர் இந்த அமைப்பில் அங்கம் வகித்தார்கள். இதில் தேசியவாதிகளும், முற்போக்குவாதிகளும், மார்க்சியவாதிகளும் அங்கம் வகித்தார்கள். இவர்கள் மத்தியதரவர்க்க குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். இவர்கள் அந்நியராட்சிக்கும், அவர்களின் அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டு இருந்த உயர் இந்து உயர் சாதிகளுக்கும் எதிராக செயற்பட்டார்கள்.
    இக்காங்கிரசின் கொள்கையானது இலங்கைக்குப் பூரண சுயாட்சி, சுயமொழிகளில் கல்வி, தேசிய ஒற்றுமை, சாதி தீண்டாமையை எதிர்த்தும், தேசிய இலக்கியம்- கலை- கலாசாரம் பேணல், தொழிலாளிகளின் நலனுக்காக தொழிற்சங்கங்கள் போன்றவைகளை உருவாக்கி, திட்ட வரையறை செய்து பிரச்சாரத்தையும், போராட்டங்களையும் நடத்துவது என்று முடிவு செய்து நடைமுறைப்படுத்தினார்கள். சுதந்திரத்துக்கு முன்னர் வரை இவர்களுடைய போராட்டம் ஆளும் ஐரோப்பியர்களுக்கும், யாழ் இந்து உயர் சாதியினர்களுக்கும் பெரும் தலையிடியைக் கொடுத்தது.
    இக்காலகட்டத்தில் தென் இலங்கையில் உள்ள உயர் மத்தியதர வர்க்கத்தைச் (தரகு முதலாளிகள்) சார்ந்தவர்களின் பிள்ளைகள் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று வந்தார்கள். இத் தருணம் இந்தியாவின் தேசியப் போராட்டம் ஆரம்பம் ஆகியது. இதன் விளைவால் ஆசிய நாட்டவர்களுக்கு எதிரான போக்கு அங்கு உருவாகியது. இதனால் இலங்கை மாணவர்களை இது வெகுவாக பாதித்தது. இவர்களை பாதுகாத்தவர்கள் ஐரோப்பிய மார்க்சிய சிந்தனையாளர்கள் ஆகும். இதனால் இவர்கள் மத்தியில் மார்க்சியக் கருத்துக்கள் வேர் ஊன்றியது. இதனால் இவர்கள் மத்தியில் ஒரு மாற்று அரசியல் கொள்கை மார்க்சிய அடிப்படையில் உருவாகியது.
    அன்று இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, மக்கள் வறுமையில் வாடினார்கள். இச்செயலை வர்க்க ரீதியாகப் பார்த்து, தம் முழு இலங்கை மக்களையும் ஆளப் பிறந்தவர்கள் என்று கருதினார்கள். இவர்களுக்கு முன்பதாகவே ஏகாதிபத்திய வாதிகளான டி. எஸ். போன்றவர்கள் முழு மக்களையும் அடிமையாக்கும் அரசியலை ஐரோப்பியர்களின் ஆதரவுடன் நடத்தினார்கள்.
    இம்மார்க்சியவாதிகள் முழு இலங்கையின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் எண்ணத்துடன் இலங்கை வந்து, தெற்கில் வாலிபர் முண்ணனி என்ற அமைப்பை 1929 ம் ஆண்டில் உருவாக்கினார்கள். இதில் கொல்வின், விக்கிரமசிங்க, பிலிப் , லெஸ்லி, என். எம். பெரேரா, பீற்றக் கெனமன், பொன் கந்தையா, அ.வைத்திலிங்கம்  போன்றவர்கள் முக்கியமானவர்களாகும். அன்று இவர்கள் மார்க்சிய இயங்கியல் விஞ்ஞான சோஷலிசத்தின் மீது பற்றுக் கொண்டவர்களாகவே இலங்கைக்கு வந்தார்கள்.
    முன்னர் யாழ்ப்பாணத்தில் இயங்கிய யாழ்வாலிபர் காங்கிரசும், தெற்க்கு வாலிபர் முன்னணியும் இணைந்து, அகில இலங்கை வாலிபர் காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். 1930ம் ஆண்டு ஐரோப்பியர்களின் பெப்பிமல் இயக்கத் துக்கு எதிராக சூரியமல் வியாபாரம் என்ற அமைப்பை உருவாக்கி முழு இலங்கை மக்களுக்குச் சேவை புரிந்தார்கள்.
    மேற்கூறப்பட்ட மார்க்சிய இளைஞர்கள், ஒரு குழப்பமான முதலாளித்துவ கல்வி முறையை கற்றதுடன், தீவிர மார்க்சிய கருத்துக்களோடும், சோஷலிச சிந்தனையுடனும் வளர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள். அன்றைய அரசியல் சூழ் நிலையால் இவர்களின் வர்க்கமுகம் அன்று மறைந்து இருந்தது. சுதந்திரத்துக்குப்பின் ஏற்ப்பட்ட அரசியல் மாற்றங்கள் இவர்களை அதிகார அரசியலுக்கு இழுத்துச் சென்றது. இதன் காலப்போக்கில் அவர்களின் அரசியல் நடவடிக்கையால் ஏற்பட்ட நடைமுறை செயற்பாட்டில், அவ்வர்க்க முகம் தோன்றத் தொடங்கியது. இவர்களில் அதிகமானோர் தங்களை ஒரு மார்க்சிய வாதியாகவோ அல்லது சோஷலிசவாதியாகவோ வெளிக்காட்ட விரும்பவில்லை. சோஷலிசத்துக்கு மாற்றுப் பெயராக, சமசமாஜிகள் என்ற பெயர் பதத்தை பாவித்தார்கள். இதனால்தான் இவர்கள் உருவாக்கிய கட்சிக்கு அப்பெயரை சூட்டினார்கள். இவர்கள் பாராளுமன்ற அதிகாரத்தில் நாட்டம் கொண்டவர்களாகவே இருந்தார்கள். சுதந்திரத்துக்கு முன் வர்க்க உணர்வுடன் அதி தீவிரமான போராட்டங்களை நடத்தினார்கள். இதனால் பாட்டாளிவர்க்க மக்கள் இவர்கள் பின்னால் சென்றார்கள். 1956ம் ஆண்டுக்குப்பின் அப்பாட்டாளி வர்க்கத்தையோ கைகழுவி விட்டார்கள். காட்டியும் கொடுத்தார்கள்.
    1926 ம் ஆண்டு ஐரோப்பாவில் பட்டப் படிப்பு முடிந்து வந்த எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா ஒரு சோஷலிசக் கட்சியை ஆரம்பித்தார். புஞ்ச மகா பலவேகய என்ற அடிப்படையில் தேசிய அபிலாசைகளையும், முற்போக்குத் தன்மையையும் கொண்டு இருந்தது. அன்றைய அரசியல் சூழ்நிலையில் இவருடைய சோஷலிசக் கொள்கை தோல்வி அடைந்தது. அதன்பின் அவர் யு. என்.பி.யுடன் இணைந்து கொண்டார். பின் 1956ம் ஆண்டு இலங்கைத் தேசிய முதலாளித்துவத்தை மையமாக வைத்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை தொடங்கினார். இதனால் இவ்இடது சாரிகளின் வீழ்ச்சி ஆரம்பமாகியது. பாராளுமன்ற அதிகாரத்தைக் கைப்பற்றும் எண்ணத்துடன் இவ் இடதுசாரிகள் தேசிய முதலாளித் துவக் கட்சியுடன் இணைந்து கொண்டார்கள். இதன் விளைவு 1960ம் ஆண்டுக்குப் பின் உழைக்கும் வர்க்கத்தை நடுத் தெருவுக்கு கொண்டு வந்து விட்டது. 1960ம் ஆண்டுக்குப் பின் இவர்களினது வர்க்க முகம் தெளிவாக வெளிவந்தது. தமிழர்களின் நியாயமான உரிமைகளை மறுதலித்தார்கள். இதற்கு கொல்வினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் மூல யாப்பு நல்ல உதாரணமாகும். தொழிலாளர் உரிமைப் போராட்டத்தை நசுக்கிய பெருமை என்.எம். பெரேராவுக்கு உரியது. முதலாளித்துவ வாதிகள் எப்படி இவ்விடதுசாரிகள் மூலம் இலங்கையில் உள்ள முழு மக்களின் ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் பறித்ததற்கு இதைவிட வேறு உதாரணங்கள் தேவையில்லை.
    பண்டாரநாயக்காவின் வரவுக்குப் பின் தமிழ் பேசும் சாதாரண மக்களின் பிள்ளைகளுக்கு கல்வி அறிவும், அரசு தொழில் வாய்ப்பும் கிடைத்தது. இத்துடன் யாழப்பாணத்தில் மாற்றுக் கருத்துக் கொண்ட தலைமைகள் உருவாகியது. இதற்கு ஜி. ஜி.பொன்னம்பலம், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்ற யாழ் மையவாதத் தலைமையின் தோல்வி நல்ல உதாரணமாகும்.
    1935 ம் ஆண்டு முதலாவது இடதுசாரிக் கட்சி உருவாகியது. இதில் இலங்கைத் தேசியவாதிகள், சீர்திருத்தவாதிகள், சோஷலிசவாதிகள், கம்யூனிசவாதிகள், முற்போக்கு சிந்தனை வாதிகள் அனைவரும் அங்கம் வகித்தார்கள். எனவே சோஷலிசம், கம்யூனிசம், வர்க்கம் என்ற மொழிப்பதங்களை மக்களிடம் இருந்து தவிர்க்கும் நோக்கத்தில்தான் சமசமாஸக் கட்சி என்ற பெயர்ப்பதத்தை பாவித்தார்கள்.
    இம்மார்க்சிய இடதுசாரிகள் முதலில் லெனினிசத்துக்கும் (3 வது அகிலம்), ட்ரொஸ்க்கியத்துக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு, முதல் பிளவை உண்டு பண்ணியது. சமசமாஸக் கட்சியில் இருந்து வெளியேறிய கம்யூனிஸ்வாதிகள் 1940 ம் ஆண்டு ஐக்கிய சோஷலிசக் கட்சியை உருவாக்கினார்கள். இக்கட்சி அரசால் தடைசெய்யப்பட்டது. பின் இவர்கள் 1943ம் ஆண்டு கம்யூனிஸ்சக் கட்சியை உருவாக்கினார்கள். பின்னர் 1963 ம் ஆண்டு ரஷ்சியா-சீனா என்ற முரண்பாட்டால் மீண்டும் பிளவு ஏற்பட்டது. இதன் மூலம் சீனா கம்யூனிஸ்சக் கட்சி சண்முகதாசன் தலைமையில் உருவாகியது. பீற்றக் கெனமன் தலைமையில் ருசியக் கம்யூனிஸகட்சி என்ற பெயரில் பழைய கட்சி இயங்கியது. இவ்விடதுசாரிக் கட்சிகள் அமைத்த தொழிற் சங்கங்களின் தலைமைப்பதவியில் இருந்த தலைவர்கள் தனியாக பிரிந்து சென்று தனித்துவமாக இயங்கினார்கள். இவர்கள் தான் எட்மன் சமரகொடி, பாலத்தம்பு, வாசுதேவ போன்றவர்கள் ஆகும். இவர்களின் செயற்ப்பாடுகளால் பல இடதுசாரிக் கட்சிகளும், தொழிற்சங்களும் உருவாகியது. இதனால் பாட்டாளிவர்க்கம் பிளவுபட்டது. இதனால் தொண்டைமான் போன்ற முதலாளிகள் தொழிற்சங்கங்களை அமைத்து தொழிலாளர்களின் தலைவனாக வரமுடிந்தது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட இடதுசாரி தொழிற்ச்சங்கங்கள் 100, 200 தொழிலாளர்களைக் கொண்ட சங்கமாக மாறியது. தொண்டைமானின் தொழிற்சங்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட சங்கமாக மாறியது.
    இவ்விடதுசாரிகளின் செயற்பாடு தொழிலாளர்களை விற்கும், வாங்கும் பொருளாக மாற்றிவிட்டது. இதனால் தொண்டை மான் போன்ற முதலாளிகள் தொழிலாளர்களின் தலைவனாக வரக்கூடியதாக அமைந்தது. இடதுசாரிகள் ஒட்டுமொத்தமாக விட்ட பிழைகள்தான் ஏகாதிபத்திய முதலாளித்துவ கட்சியான யு. என். பியும் வர்க்க உணர்வை கதைக்க தொழிற்சங்கங்களை ஆரம்பிக்க தொடங்கிவிட்டார்கள்.
    இம்மார்க்சிய கட்சிகள் ஒரு புரட்சிகர கட்சியாகத் தங்களை தயார்ப்படுத்தத் தவறியதுதான் இவர்கள் விட்ட மாபெரும் தவறாகும். ஒரு சக்திமிக்க வெகுஜனப்புரட்சி மார்க்கத்தை அடைவதற்கு தொழிலாளர்களிடமும் விவசாயிகளிடமும்  புரட்சிகரமான போதனைகளை அல்லது நடைமுறைகளை செயல்லாற்றவில்லை.
    இவ்விடதுசாரிகள் பாராளுமன்ற அபேட்சகர்களை நியமனம் செய்யும் போது கூட உயர் சாதியினர்களை நியமித்தார் கள். ஏனெனில் எதிராக நிற்பவர்கள் உயர் சாதிகள் என்பதால். சிங்களவர்களாக இருந்தாலும் சரி, தமிழர்களாக இருந்தாலும் சரி ,இந்துக்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, உயர் குடி மக்களே ஆகும்.  பொதுவாக மார்க்சிய முற்போக்கு இடதுசாரிகளைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள மேல்வாரியான தரவுகளை தந்துள்ளேன். இவைகளை நீங்கள் விரிவாக பார்க்கவும்.
    யாழ்ப்பாணத்து மார்க்சிய இடதுசாரிகள் சுதந்திரத்துக்கு முன், பல தொழிலாளர்களின் நலனை முன் வைத்து அன்னியர் ஆட்சி அதிகாரத்துக்கும், அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டு இருந்த இந்து உயர் சாதியினர்களுக்கும் எதிராகவும் பல போராட்டங்களையும் நடத்தினார்கள். இப்போராட்டம் இலங்கை தழுவிய போராட்டமாக அமைந்தது. அன்னியர்களின் அதிகாரத்துக்கு ஊடாக பௌத்த சிங்கள பேரினவாதிகளின் (டி. எஸ். போன்ற) ஒத்துழைப்புடன் தேசியவாதியும், முற்போக்குத் தொழிற்சங்க வாதியுமான பொன்னம்பலம் அருணாச்சலத்தை யாழ் இந்து ஆதிக்கார வர்க்கம் அரசியலில் இருந்து அகற்றினார்கள். இதன் பின்னர்தான் ஜி. ஜி. பொன்னம்பலம் மூலம் அரசியல் ரீதியான யாழ் உயர் சாதியின் மேலாதிக்கம் வித்திடப்பட்டது. இந்த மேலாதிக்கவாதிகள் – யாழ் இந்து உயர் சாதியினர்கள் – யாழ் மையவாதசிந்தனைப் போக்கை மெல்ல வளர்த்தெடுத்து  பயங்கரவாதியின் கையில் கையளித்துள்ளார்கள். இதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பங்கு பெரும் அளவில் இருந்தது.
    ஏ. ஈ. குணசிங்கத்தின் இனவாதப் போக்கை எதிர்த்தும், அருணாசலத்தின் அரசியலை விட்டு ஒதுங்கிய பின்பும் வர்க்க உணர்வுடன் இனபேதங்கள் உருவாகாமல் பாதுகாத்துக் கொண்டவர்கள் இவ் இடதுசாரிகளே. (1948 ம் ஆண்டு வரை).
    1956 ம் ஆண்டுக்குப் பின் சிங்கள இடதுசாரிகள் இனவாத ரீதியாக செயற்பட தொடங்கிவிட்டார்கள். தமிழர்களை நோக்கி தோசை, வடை என்ற கோஷத்தை முன்வைத்தார்கள். அன்று தமிழ் இடதுசாரிகள் இக்கோஷத்துக்கு எதிரக குரல் கொடுக்கவில்லை. இதன் பரிணாம வளர்ச்சி நிலை தான் இன்று புலிகளை தமிழ் இடதுசாரிகள் ஆதரிக்கும் நிலை.
    1970 ம் ஆண்டுக்குப் பின் இவ்விடதுசாரிகளின் தப்பான போக்கு ஈழ விடுதலை அமைப்புகளில் இருந்து இயங்கிய மார்க்சிய முற்போக்குச் சிந்தனை கொண்ட இளைஞர்களையும், அமைப்புக்களையும் இந்த யாழ் மையவாதிகள் இலகுவாக அழிப்பதற்கு ஏதுவாக அமைந்தது. இதற்கு நல்ல உதாரணம் நாலு ஈழ விடுதலை அமைப்புக்களை இணைக்கும் கால கட்டத்தில், மார்க்சிய தத்துவத்தை ஏற்ற பல சிறிய அமைப்புக்கள் இயங்கின. அவ் அமைப்புக்களில் மார்க்சிய சிந்தனை கொண்ட முற்போக்கு இளைஞர்கள் இருந்தபடியால்  அச்சிந்தனைகளைக் கொண்ட தலைமை வந்துவிடும் என்ற காரணத்தால். அவ்வமைப்புக்களை இணைக்க யாழ் மையவாதிகள் தடையாக இருந்தார்கள். இவ் விணைப்பைத் தடுப்பதற்கு மூல காரணமாக இருந்தவர் அமிர்தலிங்கமாகும். அன்று மார்க்சியவாதி என்று இனம் காட்டிக்கொண்ட வரதராஜப்பெருமாள்; அமிர்தலிங்தத்துக்கு பக்க பலமாக விளங்கினார். இவர் பிரான்ஸ்சில் இயங்கும் ஈ. பி, ஆர், எல். எவ். (மார்க்சிய கொள்கை கொண்ட ஈழ விடுதலை அமைப்பாகும்) என்ற அமைப்பின் கிளைக்கு பயங்கரத் தமிழ் தேசியவாதியான புஸ்பராஜாவை தலைவராக நியமித்தாh.;;; வரதர் தான் தலைவராக (முதல்வராக) வருவதற்கு எடுத்த நடவடிக்கை ஈ பி ஆர் எல் எவ் என்ற அமைப்பு அழிவதற்கு மூல காரணமாக அமைந்தது.
    சண்முகதாசன் உட்பட தமிழ் மார்க்சிய இடதுசாரித் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களின் நியாயமான உரிமைகளுக்கு குரல் கொடுக்கவில்லை. ஏனெனில் சிங்கள மக்கள் தங்களை இனவாதிகள் என்று முத்திரை குத்திவிடுவார்கள். இதனால் தலைமைக்கு ஆபத்து ஏற்படும் எனக் கருதி மவுனமாக இருந்து விட்டார்கள். இது சிங்கள பௌத்த இனவாதிகளுக்கு சாதகமாக அமைந்தது. (முழு இடது சாரிகளுக்கும் இது பொருந்தும்) இவ் இடதுசாரிகள் சிங்கள அரசியல்வாதிகள் தான் சிங்கள மக்களின் குரல் என்று கருதினார்கள்.  லும்பன் என்ற லெனின் கூறிய தார்ப்பரியத்தை புரிந்து கொள்ள முடியாத மார்க்சியவாதிகள், தெருச் சண்டியன்களுக்கு மார்க்சிய வகுப்பு எடுத்தார்கள். இக்பால், வி. பி போன்றவர்கள் வகுப்பு எடுத்தது நல்ல உதாரணமாகும்.
    இந்த யாழ் மார்க்சிய இடதுசாரிகள் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்தவர்களானபடியால், உயர் சாதிச் சிந்தனைகள் அவர்களிடம் குடிகொண்டு இருந்தது. அந்த உயர்சாதி மனோபாவம் அவர்களைத் தமிழ் மக்களை ஆளும் எண்ணத்தை தூண்ட  அவர்கள் பாராளுமன்ற அதிகாரத்தை நாடினார்கள். இதனால் அனைத்து உயர் சாதியினருடனும்; சமரசம் செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் சிவசிதம்பரத்துக்கு எதிரக தருமரட்ணத்தையும், செல்வநாயகத்துக்கு எதிராக காரளசிங்கத்தையும் அபேட்சகர்களாக நியமித்தார்கள்.
    இப்படியான நியமனங்கள் ஒவ்வொரு தொகுதிகளிலும் நடைபெற்றது. இச்செயற்பாடு இவ் இடதுசாரிகளின் உயர் சாதிச் சிந்தனையின் வெளிப்பாடாகும். இடதுசாரிகளை வளரவிடாது முடக்குவதற்கு அச்சிந்தனைதான் மூல காரணமாக அமைந்தது. தாங்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு தாழ்த்தப்பட்ட மக்களை பகடைக்காயாக பாவித்தார்கள். இதில் சிலர் முற்போக்கு மார்க்சியவாதிகள் என்று இனம் காட்டி தங்களை வளர்த்துக் கொண்டு உயர் சாதியினர்கள் ஆக மறிவிட்டார்கள். தங்களை மறந்ததுவும் அல்லாமல் அம்மக்களையும் மறந்து அவர்களின் உணர்வுகளையும், உழைப்பையும் சுரண்டிக் கொண்டார்கள். இதில் தீண்டாமை என். நாகரட்ணம் மட்டும் விதி விலக்காகும்.
    எந்த ஒரு மனிதன் மற்ற மனிதனுடைய உணர்வுகளையும், உழைப்பையும் சுரன்டுகின்றானோ அவன் ஒரு மேலாதிக்க வாதியாகும். இது இந்து உயர் சாதியின் தன்மையும் ஆகும்.
    இத்தமிழ் இடதுசாரிகள் இலங்கையின் சமூக பொருளாதாரத்தின் புதிய வளர்ச்சியையும், இன முரண்பாடுகளையும், தத்துவத்தின் நவீன வளச்சியையும் உரிய மார்க்கத்தில் புரிந்து கொள்ள முடியாததால் (விமர்சனம் இவர்களுக்கு பிடிக்காத விடையம்) பழைய சொற்பதங்களை மீண்டும் மீண்டும் இசை மீட்டுக் கொண்டு, பழைய தத்துவ மார்க்கத்தில் செல்வதில் அதிக கவனம் செலுத்தினார்கள். தலைமையின் தவறான போக்கின் விளைவால் யாழப்பாணத்து முற்போக்கு மார்க்சிய வாதிகளும், யாழ்ப்பாணத்தில் மேல் மேல் உயர் சாதியானவர்களும், (இவர்கள் உழைப்பாளிகள்) இந்த இந்து உயர் சாதியினரின் ஆதிக்கத்தால் கவரப்பட்டார்கள். இதற்கு நல்ல உதாரணம் வி.பொன்னம்பலம் செந்தமிழர் இயக்கம் ஆரம்பித்தது. யாழ் உயர் சாதியின் மையவாதம்  யாழ் மர்க்சிய இடதுசாரிகளின் சிந்தனையை அழித்ததற்கு நல்ல உதாரண மாகும்.
    இதனால் ஒரு பொதுவுடைமைச் சமுதாயம் தமிழர்கள் மத்தியில் உருவாக முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மனிதம் என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் போய்விட்டது. தோழன் என்ற சொல் தமிழர்கள் மத்தியில் பிழையான அர்த்தத்தை கொடுத்துள்ளது. (தான் மனைவியின் சகோதரன் என்ற எண்ணப்பாட்டை உருவாக்கி விட்டது.). இத்தமிழ் இடதுசாரிகள் பேசியதற்கு நேர் எதிர்மாறான செயற்ப்பாட்டையே செய்தார்கள்.
    இவர்கள் தங்களின் வீடுகளிலேயே, தங்கள் ஆதிக்கத்தில் இருக்கும் கோயில், குளம், கிணறு போன்ற பொது இடங்களை பொது சனங்களுக்கு திறந்து விடவில்லை. அம் மக்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. உயர் சாதிக் கட்சியினர் அவ் மக்களை எப்படிப் பாவித்தார்களோ அதே மாதிரியாகவே இடதுசாரிகளும் அம் மக்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.  இவ்விடதுசாரிகள் மத்தியில் காத்திகேசன் மாஸ்ரர் விதிவிலக்காக இருந்தார். இவர் இறக்கும் மட்டும் மார்க்சிய கொள்கையுடன் வாழ்ந்தவர். சமூகக் குறைபாடுள்ள மக்கள் மத்தியில் சென்று பிரச்சனைகளை அணுகியவர். மற்றவர்கள் அனைவரும் பிரச்சனைகளை தம் பக்கம் இழுத்துத்; தீர்வை அடைய முயன்றவர்கள். நல்ல உதாரணம் ஆலய பிரவேசம்.
    இவ் இடதுசரிகள் பேசும் திறன் கொண்டவர்களாக இருந்தாலும் செயல் திறன் அற்றவர்கள். மார்க்சியம் ஒரு இயங்கியல் தத்துவம் என்பதை மறந்துவிட்டார்கள்.
    சண்முகதாசன் புளொட், புலிகள் நடத்திய மேதினக் கூட்டங்களில் பேசினார். தொழிலாளவர்க்கம் என்று கருதப்பட்ட மலையக மக்களைக் கணக்கில் எடுக்காது முதலாளித்துவ கட்டமைப்புக்குள் உள்ளேயே தொழிற்சங்க வேலைகளை செயற்படுத்தினார்களே ஒழிய, அம்மக்களுக்கு வர்க்கச் சிந்தனைகளை போதிக்கவில்லை. மார்க்சுக்கு ஒரு ஏங்கல்ஸ் இருந்தமாதிரி இவ் இடதுசாரித் தலைவர்களுக்கு பல ஏங்கல்ஸ்சுகள் இருந்தார்கள். ஆனால் இந்த ஏங்கல்ஸ்கள் மார்க்சிய விரோதப் போக்கை கொண்டவர் களாக இருந்தார்கள். இதனால் இடதுசாரித் தலைவர்கள் இப்போக்கை பாராமுகமாக இருந்ததால் அவர்களுக்கு சுகபோகமாக வாழவழி கிடைத்தது.
    கட்சியில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கும் போதும், தொழிலாளவர்க்கம் மிகப் பெரிய போராட்டத்தை நடாத்தும் போதும் சண்முகதாசன் அல்பேனியா போன்ற வெளிநாடுகளுக்கு தத்துவ முரண்பாடுகளை பேச சென்று விடுவார். கினக்கலை தோட்ட தொழிலாளர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்திய சமயத்திலும், யாழ்ப்பாணக் கிளை தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வுகாணும் நோக்கத்தில் கூடிய கூட்டத்துக்கும் வராது இருந்ததுடன் இரண்டாம் மூன்றாம் நிலையில் உள்ள தலைமைகளிடம் விடையத்தை  ஒப்படைத்தார். தொழிலாளர் நலன் பேண இராமையா போன்றவர்களையும், தேசிய இனப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு டானியல் போன்றவர்களையும் சண்முகதாஸன் நியமித்தது இதற்கு நல்ல உதாரணமாகும். இலங்கையின் இனப் பிரச்சனைகளைப் பற்றியும். வர்க்க முரண்பாடுகளைப் பற்றியும் விளங்கிக் கொள்ள முடியாத சண்முகதாசனை, ஓரளவுக்கு மார்க்சிய சிந்தனை கொண்ட இளம் தோழர்கள் விமர்சிக்க முற்ப்பட்ட போது அதை  எதிர்த்தவர்கள் சண்ணின் விசுவாசிகள் ஆகும்.  பின் புலிகளின் கொலைகளுக்கும், பயங்கரவாதத்துக்கும் மார்க்சிய ரீதியான விஞ்ஞான விளக்கத்தை கொடுக்கின்றார்கள் இவர்கள்.
    ஜி. ஜி. கொழும்பை மையமாக வைத்து தமிழ் மக்களை ஆளலாம் என்று கருதிச் செயற்பட்டார். யாழ் மையவாதிகளான செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றவர்கள் யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து தமிழ் பேசும் மக்களுடன் கூடி இருந்து ஆள்வதற்காக செயற்பட்டார்கள். மார்க்சிய இடதுசாரிகள் கொழும்பை மையமாக வைத்து பாட்டாளி மக்களை ஆளலாம் எனக் கருதி செயற்பட்டார்கள். மக்களுடன் இணைந்தால்த்தான் தங்கள் எண்ணங்களை நடைமுறைப்படுத்தலாம் என்ற எண்ணம் கொண்ட யாழ் மையவாதிகளுக்குப் புரிந்தளவு இந்த மார்க்சியவாதிகளுக்கு புரியவில்லை. இதனால் உழைக்கும்  மக்களுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையில் பெரிய இடைவெளி உருவாகியது. இந்த இடைவெளியை நிரப்ப தரகர்களை நாடவேண்டி வந்தது. இத்தரகர்கள் தான் தோட்டத்தில் உள்ள தலைவர்களும், மார்க்சியத்தைப் புரிந்து கொள்ளாத சிறு தலைமைகளும் ஆகும். யாழப்பாணத்தில் இயங்கிய மார்க்சிய இடதுசாரிகள் அனைவரும் தலைமையின் விசுவாசிகளாக இயங்கினார்கள். தலைமையின் விசுவாசிகளாக இருப்பதும், தலைமைக்கு எதிரானவர்களை துரோகி என்று கூறுவதும் தமிழர்களின் மரபாகும். இது தமிழரின் கெட்டிதட்டிப் போன மேலாதிக்க சிந்தனையாகும். இவ் விடையத்தில் இடதுசாரிகளினுடைய சிந்தனையும் ஒத்ததாகவே இருந்துள்ளது.
    தொழில் ரீதியாக இடதுசாரித் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்த பல தமிழர்கள் வெளிநாடுகளில் தங்களை இடதுசாரிகள் என்று அறிமுகம் செய்வதை இன்று பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. திட்டமிட்டு முதலாளித்துவம், தேசிய இனப்பிரச்சனையை பாரிய அளவில் வளர்த்தபின்பும் வர்க்கப் பிரச்சனையை பேசிக் கொண்டு இருந்தார்கள் இந்த இடதுசாரிகள்.
    பின்பு தங்கள் பிள்ளைகள் ஈழ விடுதலை இயக்கங்களுடன் இணைந்தவுடன் அவ்வியக்கங்களுடன் இணைந்து செயல்படுகின் றார்கள். அதனால்தான் இன்று பல மார்க்சிய இடதுசாரிகள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயல்ப்படுகிறார்கள். மாற்றுக் கருத்துக்கள் ஏதுமற்று புலிகளின் பயங்கரவாதத்துடன் இணைந்து மார்க்சியத்தில் விளக்கம் கொடுக்கின்றார்கள்.
    பயங்கரத் தமிழ்த் தேசியவாதிகளை விட இவ்விடது சாரிகள்தான் பயங்கரவாதத்துக்கு பக்கபலமாக விளங்குகின்றார்கள். ஈழ விடுதலைப்போராட்டம் தொடங்கியபின் இலங்கையில் உருவான முரண்பாடுகளை இனம்கண்டு, தீர்க்கும் விதத்தில் மார்க்சிய விளக்கம் கொடுக்கும் பல முற்போக்குத் தமிழ் இளைஞர்களுடன் நட்பு ஏற்படுத்த இந்த பழைய மார்க்சிய இடதுசாரிகள் தயங்கினார்கள். ஏனெனில் தங்களைவிட அவர்கள் மார்க்சியத்தை நன்கு அறிந்து கொண்டு யதார்த்தமாக விவாதிப்பதால். சண்முகதாசன் தலைமையில் இயங்கும் சீனாக் கம்யூனிஸ் கட்சியால் தான் இனப் பிரச்சனைக்கு நல்ல தீர்வை கொடுக்க முடியும் என்று கருதி சந்ததியார், விசுவானந்ததேவன் போன்ற இளைஞர்கள் சண்ணுடன் கதைக்கச் சென்ற போது நீங்கள் இனவாதிகள் வெளியே போங்கள் என்று சொல்லி அனுப்பிய கூற்று இதற்;கு நல்ல உதாரணமாகும். டானியலும் அச் சந்தர்ப்பத்தில் இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. .
    அன்ரன் பாலசிங்கம் புலிகளுக்கு மார்க்சிய வகுப்பு எடுத்தமை, இந்தியாவில் இயங்கிய ரெலோவுக்கு வி. பொன்னம்பலம் மார்க்சிய வகுப்பு எடுத்தமை, யாழ்ப்பாணத்தில் ரெலொ தாஸ்க்கு இக்பால் மார்க்சிய வகுப்பு எடுத்தமை இதற்கு நல்ல உதாரணங்களாகும்.
    இலங்கையின் அரசியல் வரலாற்றில் மார்க்சிய இடதுசாரிகள் வகித்த வலுவான பத்திரத்தை யாரும் மறுதலிக்க முடியாது. இவர்கள் (தலைமைகள்) மார்க்சியப் பாதையைப் பின்பற்றி இருந்தாலும், இவர்கள் மத்தியில் பல குறைபாடுகளும், தத்துவப் போட்டிகளும், நடைமுறைத் தவறுகளும் நிறைய இருந்துள்ளது. இத்தவறுகளை சுட்டிக்காட்ட தலைமையின் விசுவாசிகளான பல தோழர்கள் மவுனமாக இருந்தார்கள்.  இதுதான் இன்றுவரைக்குமான சிக்கல்களுக்கு மூல காரணமாகும். எல்லாத் தவறுகளையும் மறைத்து எவ்வித கேள்வியுமற்று தலைமையைக் காப்பாற்றுதல் என்பதுதான் தமிழ்ச் சமூகத்தின் இன்றுவரைக்குமான மரபான செயற்பாடாய் வந்துவிட்டது. இதுதான் மேட்டுக் குடியின் சிந்தனையாகும். இச்சிந்தனைதான் யாழ்ப்பாணத்தில் இயங்கிய அனைத்து மார்க்சிய சிந்தனை கொண்டவர்களையும் அழித்தது.
    உலகத்தில் பல தத்துவங்கள் மனித குலத்தை மனித நாகரிகத்தை மேன்படுத்துவதற்கு உருவாக்கப்பட்டது.  இந்தத் தத்துவங்களை செயல்படுத்தியவர்கள் விட்ட பிழைதான் தத்துவங்களை பிழையாக்கி இயங்கவிடாமல் முடக்கியது. புத்த தத்துவமும், மார்க்சிய தத்துவமும் நல்ல உதாரணமாகும். இத்தத்துவங்களின் நெகிழ்ச்சிப் போக்கை உருவாக்க புதிய நவீன தத்துவங்கள் உருவாகியது. இவைகளை மக்களின் சமூகப் பார்வையில் பார்க்காமல், அதிகார அரசியலின் பார்வையைப் பார்த்து தங்களுக்கு சாதகமாக எடுத்து, இன்றைய முற்போக்கு வாதிகள் கதைக்கின்றார்கள்.

    Editors
  • கற்சுறா-அதீதா

  • Contact
  • matrathu@hotmail.com

  • More Articles
  • 39வது இலக்கியச்சந்திப்பு.
  • தமிழ் இடதுசாரிகளும் யாழ் மையவாதத்தின் சிந்தனையும்; -சண்முகலிங்கம்.
  • விமல் குழந்தைவேலின் – கசகறனம் – நாவல் உரை அரங்கு!
  • வடலியின் நான்கு நுால்கள் அறிமுக அரங்கு.
  • குமார் மூர்த்தியின் பத்தாவது நினைவு ஆண்டு…
  • Killலி சூனியம்.
  • துயரில் இணைதல்…
  • கொட்டியாரம்: இலக்கியமரபு.
  • ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்டநாட்களும்’
  • நாடகம்: